ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது.
அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது.
இந்த முழு மோசடியையும் வங்கியின் துணை ஆய்வாளர் சிலருடன் சேர்ந்து நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வங்கியின் ஆடிட்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி செய்தவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு HDFC வங்கி ஜபல்பூரில் உள்ள ஐந்து கிளைகளில் வெவ்வேறு கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆடிட் செய்யும்பொழுது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை பத்திரமாக அடகு வைத்து கடனைப் பெற்றிருப்பது தெரியவந்ததாக ஜபல்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரியங்கா சர்மா தெரிவித்தார்.
இது குறித்து விசாரித்தபோது, ஒன்றல்ல இரண்டல்ல, தில்ஹாரி, சிவில் லைன், ஆதார்தால், ரஞ்சி, தன்வந்திரி நகர் ஆகிய கிளைகளில் போலி தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கிய 83 தங்கக் கடன் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில் மனோஜ் படேலும், ராகுல் யாதவும் போலி தங்கத்தை அடகு வைத்தது தெரியவந்தது. விசாரணையில், விவேக் ஜாரியாவும், கவுரவ் ரஞ்சனும் கடன் வாங்கி மோசடி செய்தது உறுதியானது. அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது, அங்கித் சைனி மற்றும் பங்கஜ் விஸ்வகர்மா ஆகியோர் தலா ரூ.3000 செலுத்தி கடனுக்கு விண்ணப்பிக்குமாறு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
துணை ஆய்வாளர் சத்ய பிரகாஷ் சோனியிடம் விசாரணை நடத்தியபோது, தங்கம் தேர்வின் போது தவறு நடந்ததாக கூறினார். இருப்பினும், இந்த வழக்கில் அங்கித் சைனி மற்றும் பங்கஜ் விஸ்வகர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் மற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.