+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக அறிவிப்பு!
கணித தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி முடிவுற்ற நிலையில் நேற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வின் போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு கல்வித்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவியது நிரூபணம் செய்யப்பட்டது. இதனால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தேர்வு கண்காணிப்பாளர் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குற்றம் சுமத்தப் பட்ட பள்ளியில் உள்ள அறை எண் 3 மற்றும் 4 ஆகியவற்றில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த 34 மாணவர்களும் தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலைக் கேட்ட மாணவர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.இந்த மாணவர்களில் பலர் நீட் தேர்வுக்கு பயிற்சிப் பெற்று வரும் சூழ்நிலையில் கணித பாடத்தில் தோல்வி என்பது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். எனவே முறையான விசாரணை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.