ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரில் இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக இணைந்துள்ளதால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் களம் காண இருக்கின்றன. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.
கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடத்தப்பட இருக்கிறது. மும்பையில் வான்கடே மைதானம், டி.ஒய்.படேல் ஸ்டேடியம் உள்ளிட்ட மைதானங்களில் 55 போட்டிகளும், புனே மைதானத்தில் 15 போட்டிகளும் நடைபெற இருக்கிறது.
மார்ச் 26-ந் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் மே 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பரவலின் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நேரில் காண 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஐபிஎல்-லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கின்றன. பிளே-ஆப் மற்றும் இறுதி போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.