ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்ஐவி-யால் பாதிப்பு.. இளம் பெண்களே உஷார்..!!
முன்பெல்லாம் பெண்கள் பெரிதாக அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். இயற்கையான முறையிலேயே முகத்தை பொலிவு பெற செய்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல சலூன், பார்லர் மற்றும் ஸ்பா என நிறைய வந்துவிட்டன. முகப்பருவை நீக்க, கருமையை நீக்க என எல்லாவற்றிற்கும் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன.
குறிப்பாக இளம் பெண்கள் முகத்தை அழகாக்க ஃபேஷியல் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டும் பிரபலமாக இருந்த வேம்பயர் ஃபேஷியல் தற்போது இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. பொதுவாக ஃபேஷியலில் க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் வேம்பயர் ஃபேஷியலுக்கு நம் உடலில் ரத்தத்தை தான் பயன்படுத்துவார்கள். இந்த வகையான ஃபேஷியலுக்கு நம் உடலில் இருந்து 8 மில்லி ரத்தம் ஊசி மூலம் எடுக்கப்படும். பின் அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் தனியாக பிரித்து ஊசி மூலம் முகத்தில் செலுத்துவார்கள். இந்த ஃபேசியலுக்கு 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் வேம்பயர் ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்கள் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள் நியூ மெக்சிகோவில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்பா ஒன்றில் வேம்பயர் ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஃபேஷியல் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மூலம் இந்த நோய் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனையடுத்து அந்த ஸ்பா உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, ஃபேஷியல் செய்யும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.