40 ஆண்டுகால கோரிக்கை நிறைவு! புதிய சாலை கிடைத்த சந்தோஷத்தில் ஊத்துக்காடு கிராமத்தினர்!
கம்பம் பகுதியில் இருந்து கோம்பை,பண்ணைபுரம் செல்லும் சாலை 40 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது புதிய தார்ச்சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் ஊத்துக்காடு கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கோம்பை செல்லும் சாலையில் உள்ள நாககன்னியம்மன் கோயில் அருகே ஓடை பாதை கடந்த 40 ஆண்டுகளாக மண் பாதையாக இருந்து வந்தது.
இதனால் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த சாலையானது கம்பம் நகராட்சி எல்லைக்கும் புதுப்பட்டி பேரூராட்சிக்கு எல்லைக்கும் இடையே அமையப் பெற்றதால் இந்த சாலை கம்பம் நகராட்சிக்கு சொந்தமானதா அல்லது புதுப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமானதா என்பதில் குழப்பம் நீடித்து வந்துள்ளது.
மேலும் சாலை அமையப்பெற்ற பகுதியானது ஓடைப் பகுதி என்பதால் பல ஆண்டுகளாக சாலை அமைக்கபடாமலேயே இருந்தது.இந்நிலையில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதிக்கு புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து வந்த நிலையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனிடம் அப்பகுதி பொதுமக்கள் நேரில் சென்று புதிய தார்சாலை அமைத்து தர கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 6.5 லட்சத்தில் புதிய தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தற்காலிகமாக இந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டாலும், புதுப்பட்டி பேரூராட்சி அல்லது கம்பம் நகராட்சி நிர்வாகமும் சாலை அமையப்பெற்ற இடத்தை சர்வே செய்து இந்த சாலைக்கு சொந்தமான நிர்வாகத்தினர் தொடர்ந்து சாலையை பராமரித்து வர வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்காடு கிராம மக்கள் கூறுகையில், ” மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கம்பத்தில் இருந்து ஊத்துக்காடு, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் மேற்கு பகுதி வழியாக கோம்பை வரை கடந்த 1998-ம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஊத்துக்காடு புறவழிச்சாலை பிரிவில் இருந்து கோம்பை வரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் கம்பம் நாக கன்னியம்மன் கோவில் பாலத்தில் இருந்து ஊத்துக்காடு புறவழிச்சாலை வரை எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாமல் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. தற்போது கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி நிதியில் தற்காலிகமாக சாலை அமைத்துக் கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர். மேலும் தொடர்ந்து சாலையை பராமரிப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.