பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்!

0
116
5 lakh income per acre in paneer grapes! Earn 3 times a year!
5 lakh income per acre in paneer grapes! Earn 3 times a year!

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெறும் திராட்சை விவசாயத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் செலவு செய்தால் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறமுடியும் என்கின்றனர் விவசாயிகள்.
ஆண்டுக்கு 3 முறை வெள்ளாமை – ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் : பன்னீர் திராட்சையில் விவசாயத்தில் இவ்வளவு நன்மைகளா?
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூா், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திராட்சை சாகுபடி இருந்தாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாகுபடியாகும் திராட்சையை கேரளாவாசிகள் விரும்பி வாங்குவர். இங்கு சாகுபடி செய்யப்படும் பன்னீா் திராட்சை, அண்டை மாநிலமான கேரளம் மற்றும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திராட்சை அறுவடை நடைபெறும்
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நடைபெறும் திராட்சை விவசாயத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறது.
காலநிலை :-
தேனி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு உகந்தது பன்னீர் திராட்சை சாகுபடி என்கின்றனர் விவசாயிகள். பன்னீர் திராட்சை தேனி மாவட்டத்தை காட்டிலும் மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். குறிப்பாக நோய்த்தாக்குதல் மற்ற மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும். மற்ற மாவட்டங்களில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை பெரும்பாலும் சுவை இல்லாமலும் நிறம் இல்லாமலும் காணப்படும்.
ஆனால் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் திராட்சைக்கு எப்போதும் மவுசு உண்டு. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையக்கூடிய திராட்சை எப்போதும் சுவையுடனும் கருப்பு நிறத்துடனும் இருப்பதற்கான காரணம் இங்குள்ள மணலும் மிதமான வெப்பநிலையும் தான் எனக் கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் எப்போது வந்தாலும் திராட்சையை வாங்கிக் கொள்ள முடியும். அந்த அளவிற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திராட்சை விவசாயம் செய்து வருகின்றனர். திராட்சை விவசாயத்தில் போதிய லாபம் உள்ளதால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் திராட்சை விவசாயத்தில் நாட்டம் காட்டி வருகின்றனர்.
பயிர் செய்யும் முறை :-
120 நாட்கள் பயிரான திராட்சையை குழந்தையைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதிக கவனத்துடனும் திராட்சை கொடியை கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர். பட்ஸ் என்று அழைக்கப்படும் திராட்சை கம்பை 5 அடிக்கு ஒன்றாக வைக்க வேண்டும். சொட்டுநீர் பாசனம் மூலம் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சி வந்தால் ஓராண்டிற்குள் அந்த கம்பானது கொடியாக அடர்த்தி பெற்று விடும். பின்னர் அதனை கவாத்து என்ற முறையில் கொடியை வேலி போட்டு அதற்கு மேலாக வேலி போட்ட கம்பியுடன் சேர்த்து திராட்சை கொடியை கட்ட வேண்டும். திராட்சையானது அதனது வளர்ச்சியில் 8 கட்டங்களைக் கடந்த பின்னர் ஆக விற்பனைக்கு தயாராகிறது.
திராட்சையில் பல்வேறு நோய்த் தாக்குதல் இருப்பதால் நோய் தாக்கத்திலிருந்து திராட்சையை பாதுகாக்க கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ரசாயன உரங்களை முதல் 60 நாட்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தெளித்து வருகின்றனர்.
பின்னர் அடுத்த ஆறு நாட்கள் எந்த ஒரு ரசாயன உரங்களும் பயன்படுத்தாமல் கொடியை இயற்கையாகவே வளரவிட்டு வருகின்றனர். திராட்சை விவசாயத்தில் முக்கியமானது ஒன்று நீர் பாசன முறை. திராட்சைக் கொடி வேர் பாயும் இடத்திலிருந்து 1 1/2 அடி இடைவெளியில் சொட்டு நீர் பாசன குழாய் அமைத்து நீர்ப்பாசன முறையை மேற்கொள்ள வேண்டும்.
திராட்சை விவசாயத்தில் அதிக வெயிலும் ஆபத்தானது அதிக மழையும் ஆபத்தானது. இந்த இரண்டு கால நிலையிலும் திராட்சை விவசாயத்தில் நுட்பத்தை கற்று கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெறுகின்றனர்.
திராட்சை விவசாயம் முதல் முதலாக செய்யும் நபர்களுக்கு பெரும்பாலும் லாபம் வராது எனவும் , தொடர்ந்து 2, 3 ஆண்டுகள் திராட்சை சாகுபடி செய்யும் போது ஓராண்டில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு லாபம் கொட்டும் எனவும் கூறுகின்றனர். ஏக்கருக்கு 2 லட்சம் செலவு செய்தால், ஓர் ஆண்டுக்கு மூன்று முறை விளைச்சல் எடுத்து ஏக்கருக்கு அதிகபட்சமாக 5 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்கின்றனர்.
திராட்சை விவசாயிகளுக்கு சகிப்புத்தன்மையும் முக்கியம் எனவும் கூறுகின்றனர். கிலோ 50 ரூபாய் முதல் 60 ரூபாய் விற்பனையானது என்றாலே விவசாயிகளுக்கு லாபம் தான். இந்தப் பகுதிகளில் விளையும் திராட்சையானது பெரும்பாலும் விற்பனைக்கு செல்வதாகவும் , குறைந்தளவான விவசாயிகளை ஜூஸ் கம்பெனிக்கு திராட்சையை அனுப்புவதாகவும் கூறுகின்றனர்
அவ்வப்போது திராட்சை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் ஒரே ஆண்டில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் கிடைப்பதால் இப்பகுதி விவசாயிகள் திராட்சை சாகுபடி தொடர்ந்து செய்து வருகின்றனர்..