ஒரு டயருக்கு 5 ஆயிரம் அபராதம்.. தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் கேரள போலீசார்..!! 

Photo of author

By Vijay

ஒரு டயருக்கு 5 ஆயிரம் அபராதம்.. தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் கேரள போலீசார்..!!

தமிழக வாகனங்களுக்கு கேரள மாநில போலீசார் வேண்டுமென்றே அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அவர்களின் காரில் சொந்த வேலைக்காக கேரளா சென்றுள்ளனர். அப்போது தமிழக கேரள எல்லையில் கேரள மாநில மோட்டார் வாகன கண்காணிப்பு துறை போலீசார் இளைஞர்களின் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

கேரள மாநில மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ள அம்மாநில போலீசார் இளைஞர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். அதுவும் எப்படி என்றால் ஒரு டயருக்கு 5 ஆயிரம் ரூபாய் விதம் 4 டயருக்கும் சேர்த்து மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தங்கள் வாகனத்தை மட்டுமே சோதனை செய்து அபராதம் விதித்துள்ள போலீசார் தங்களுக்கு முன்பாக சென்ற கேரள மாநில பதிவெண் கொண்ட வாகனத்தை சோதனை கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழக வாகனங்களுக்கு மட்டும் தான் அபராதமா? கேரள வாகனங்களுக்கு ஏன் அபராதம் விதிப்பதில்லை? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தை இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்தும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் அளிக்க போவதாகவும் இளைஞர்கள் கூறியுள்ளனர். இதனை கண்ட பலரும் டயருக்கு அபராதம் விதிக்கும் செயல் எல்லாம் கண்டிக்கத்தக்கது என அவரவர் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.