50 கோடி வாட்ஸ் அப் பயனர்கள் தொலைபேசி எண்கள் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்
50 கோடி வாட்ஸ் அப் பயனர்கள் தொலைபேசி எண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளி வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலி உலக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியில் செய்திகளை அனுப்புதல், புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது.
மேலும், 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் ஒருவர் மற்றொருவரிடம் அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய ஹேக்கர்களின் தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளை வாட்ஸ் அப் பயனாளிகள் தவிர்க்க வேண்டும் என்று சைபர் நியூஸ் அறிவித்துள்ளது.
இந்த தரவுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, எகிப்து, இத்தாலி, சவூதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது வரை சைபர் நியூஸ் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு மெட்டா நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.