தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தல் தேதியை அண்மையில் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி, தமிழகம், கேரளா ,போன்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக முன் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. அதோடு 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் களம் விரிவடைந்து இருக்கிறது. அந்த விதத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் அந்தந்த மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கறிஞர் எம்எல் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து அந்த சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த பின்பு தேர்தலை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல பிரதமர் நரேந்திர மோடி எல்லோருக்கும் பொதுவானவர் பிரதமர் நரேந்திர மோடி 5 மாநிலங்களின் பாஜகவிற்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார் வழக்கறிஞர் எம்எல் சர்மா.
இதுபோன்ற சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் எ பாப்டே தலைமையில் நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன், ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார் இதனை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.