6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!!
தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாத மோடி அரசு அம்பானியின் மகன் திருமணத்திற்கு மட்டும் மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார்.
ரிலையன்ஸ் அதிபரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒரு வருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வருகின்ற ஜூலை மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானி ஜியோ குடும்பத்தில் முக்கிய பொறுப்பினை வகித்து வருகிறார். இதற்கென உலகத்தில் உள்ள முக்கியமான தலைவர்கள் அனைவருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணத்திற்கு விருந்தினர்கள் வந்து செல்லும் வகையில் ஏராளமான ஏற்பாடுகளை இந்தியாவை வியக்கத்தகும் வகையில் அம்பானி தம்பதியினர் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 3-ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தொழில் அதிபர்கள் பில் கேட்ஸ், மார்க் ஜூகர் பெர்க், உலக அளவில் பிரபலமான பாப் பாடகி ரிஹானா போன்றோர் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளனர். விருந்தினர்கள் வருகின்ற விமானம் நேரடியாக ஜாம்நகருக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்த முகேஷ் அம்பானி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்தை வழங்கியுள்ளது.
பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 6 விமானங்கள் வழக்கமாக வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மதுரை சட்டமன்ற தொகுதியின் எம்.பி. சு. வெங்கடேசன் இந்த அந்தஸ்து குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்தை வழங்கி அம்பானி மகன் திருமணத்திற்கு மோடி அரசு பரிசாக மெகா மொய் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கையை தமிழ்நாட்டுக்கு எதற்கு 4-வது சர்வதேச விமான நிலையம் எனக் கேள்வி கேட்ட இவர்கள், 6 விமானங்கள் இறங்கி ஏறுகின்ற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு செய்து முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கு மெகா மொய் வழங்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.