7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!

Photo of author

By Vijay

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு.
சென்னையில் உள்ள கோயம்பேடு பழச் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழம் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு பழ சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில் அங்குள்ள பழக்கடைகளில் ரசாயனம் மூலம் வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதிஷ்குமாா் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அங்காடி நிா்வாகக் குழு ஊழியா்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கோயம்பேடு பழச் சந்தையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளில் வைக்கப்பட்டிருந்த, ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமாா் 5 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ் குமாா் கூறுகையில், வியாபாரிகள் சிலா் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.
இதுபோன்ற பழங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். மாம்பழங்களை எப்படி பழுக்க வைக்க வேண்டும் என்பது குறித்து கோயம்பேடு பழச்சந்தை வியாபாரிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.