74-வது குடியரசு தின விழா! அலங்கார ஊர்திகளால் அழகாக மாறிய டெல்லி!
இந்தியாவில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் 17 வகை ஊர்திகளின் அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது.
இன்று ஜனவரி 26 ஆம் நாள் நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வருகை புரிந்தனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொண்டுள்ளார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன் தலைநகரில் உள்ள போர் நினைவு இடத்தில் பிரதமர் மோடி நினைவஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி ஏற்றபின் அவருக்கு இது முதல் குடியரசு தின விழாவாகும். கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் அவர் தேசிய கீதம் ஒலிக்க தேசிய கொடியை ஏற்றினார்.
பின்னர் அவர் கொடியேற்றி முடித்ததும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகை அருகே கடமை பாதையில் தொடங்கிய அணிவகுப்பு விஜய் சௌக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற இருக்கிறது. இந்த முறை முப்படைகளுடன் குதிரைப்படை மட்டுமின்றி ஒட்டகப் படையும் ராணுவ பிரிவில் இடம் பெற்றது. கடற்படை பிரிவில் முதன்முறையாக 3 பெண் அதிகாரிகள், 6 அக்னி வீரர்கள் உட்பட 144 இளம் மாலுமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் விமானப்படை பிரிவில் அணிவகுப்பில் பங்கேற்றனர். அணிவகுப்பில் 148 தேசிய மாணவப் படையினர், 448 நாட்டு நலப்பணி திட்ட மாணவப் படையினர் ஆகியோருடன் எகிப்து நாட்டு படைப்பிரிவும் இடம்பெற்றது. இத்துடன் மாநில மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள் துறைகளின் அலங்கார அணி வகுப்பு, குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சாகச நிகழ்ச்சிகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.
நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தமது நடன நிகழ்ச்சிகளால் விழாவை சிறப்பாக மாற்றினர். 6 துறைகளின் அலங்கார ஊர்திகளோடு தமிழ்நாடு, அசாம், ஆந்திரா உட்பட 17 மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு ஊர்தியும் கலந்து கொண்டு விழாவையே மிகவும் அழகாக கண் கவரும் வண்ணம் மாற்றின. குடியரசு தின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தலைநகர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வரலாறு காணாத வகையில் பலப்படுத்தப்பட்டு இருந்தன.