8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!!
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் திடீரென மாரடைப்பில் எட்டு மாத குழந்தை உயிரிழந்தது. இதனால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஜோஸ் என்ற எட்டு மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இதையடுத்து கடுமையான காய்ச்சல் காரணமாக ஜோஸ் கோட்டையம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிந்தைய கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று ஆய்வின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென மே 29ஆம் தேதி அன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இரவு 9 மணி அளவில் இன்பிளிக்சிமாப் என்ற ஊசி போடப்பட்டுள்ளது. ஊசி போடப்பட்ட சில மணி நேரங்களில் குழந்தை திடீரென அசாதாரணமாக மூச்சு விடுவதை பார்த்து அங்கிருந்த குழந்தையின் தாயின் பெற்றோர் கூச்சலிட்டனர்.
உடனடியாக அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் குழந்தை சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவமனையில் ஊசியின் மூலம் செலுத்தப்பட்ட மருந்தே காரணம் என்றும், இந்த மருந்தை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிந்திருந்தும், எந்தவித கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லாமல் செலுத்தியதே காரணம் என்று குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை இறந்ததை தொடர்ந்து கதறி துடித்த குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல மருத்துவமனை மீது சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல்நிலையை சரியாக கண்காணிக்காமல் அதிக அளவு மருந்தை கொடுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை இருந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனை சார்பில் கூறுகையில், குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்துள்ளது. மருத்துவமனையில் எந்தவித மருத்துவ கோளாறும் இல்லை என மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான புகார் இருந்தால் அதற்குரிய விரிவான பதிலை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.