தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்த போதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஆனால் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவறவிட்டனர். அதில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 10 ஆட்டங்களில் 9-ல் தோல்வி அடைந்திருக்கிறது. ஐதராபாத் போட்டியில் ஹெட்மயர், பொல்லார்ட், இவின் லீவிஸ் அதிரடி காட்டி ரன் மழை பொழிந்தனர். ஆனால் மெகா ஸ்கோர் குவித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.
திருவனந்தபுரம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும்.