விஜய் & மகேஷ்பாபு நடிப்பில் மணிரத்னம் இயக்க இருந்த ‘பொன்னியின் செல்வன்’…ரசிகர்கள் அறியாத தகவல்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .
செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து நேற்று மாலை படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மணிரத்னம் “இந்த படம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் நடிக்க வேண்டியது. நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு அவர் இந்த படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஏனோ முடியாமல் போய்விட்டது. இப்போது நான் நினைக்கிறேன். அவர் எங்களுக்காக விட்டு வைத்துவிட்டு போயிருக்கிறார் என்று. நானே மூன்று முறை படத்தை தொடங்கி ஆரம்பிக்க முடியாமல் கைவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பற்றி பலரும் அறியாத தகவல் ஒன்று உள்ளது. 2010 வாக்கில் மணிரத்னம் விஜய் மற்றும் மகேஷ் ஆகிய இருவரை வைத்து வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழி வர்மன அகிய இரு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க ஆயத்தமானார். விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரும் படத்துக்கான தேதிகளைக் கொடுத்தனர். ஆனால் சில காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது படத்தை மேலும் பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.