பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாத் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும். குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்கவேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகக் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும். பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், சமுதாயத்துக்கும் தொடர்பு ஊடகமாக இருத்தல். அனைத்துப் பள்ளி வயது குழந்தைகளையும் (6 முதல், 14 வயது) பள்ளியில் சேர்ப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் நோக்கங்களாகும்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் கலந்து கொண்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பன்னீர்செல்வம், சமூக ஆர்வலர் அன்புக்கரசன், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் கோபிநாத் பேசுகையில் பள்ளியை மேம்படுத்துதல், மாணவர்களின் கற்றல் மேம்படுத்துதல்
உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் செய்திடல், தேவைகளை தீர்மானித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
மேலும் இப்பள்ளியில் 1850 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பழமை வாய்ந்த கட்டிடங்கள் என்பதால் அவற்றிற்கு மாற்று ஏற்படுத்திட வேண்டும் எனவும், தற்போது பள்ளி வளர்ச்சி பணிகளாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு இருப்பதாகவும் எடுத்துரைத்தார். முன்னதாக தாமும் இப்பள்ளியில் படித்த மாணவன் என்றும் தமது பெற்றோரும் இப்பள்ளியில் படித்த மாணவர் என்பதையும் பெருமைப்பட பேசினார். தான் படித்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு அளித்த இறைவனுக்கு அவர் நன்றி தெரிவித்த துடன் பள்ளி வளர்ச்சிக்கு தம்மால் எவ்வளவு பணியாற்ற முடியுமோ அவ்வளவு தூரம் பணியாற்றி பள்ளியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று உறுதிபட தெரிவித்தார்.