தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
நேற்று தன்னிச்சையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13ஆம் தேதி விடுவதின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நடந்த போராட்டங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. சம்மந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு ஆதரவாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நேற்று அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என அறிவித்தனர்.
ஆனால் நேற்று பெரும்பாலான பள்ளிகள் இயங்கின. அதையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டு 987 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அளித்துள்ளன. இது சம்மந்தமாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பள்ளிகள் தரப்பில் இருந்து தரப்படும் விளக்கத்தை அடுத்து பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
இதற்கிடையில் நடந்து வரும் விசாரணையில் மறைந்த மாணவி ஸ்ரீமதி எழுதிய தற்கொலை கடிதம் காவல்துறையினரிடம் கிடைத்துள்ளது.