லிங்கா படம் தோல்விக்கு ரஜினியின் முடிவும் காரணம்… இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஓபன் டாக்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ரஜினிகாந்தின் லிங்கா திரைப்படம் மிக மோசமான தோல்வியைப் பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடிப்பில் உருவான சிவாஜி, எந்திரன் ஆகிய திரைப்படங்கள் அப்படியான வெற்றியைப் பெற்றன. சமீபத்தில் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது.
அதன் பின்னர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரஜினியின் ஆஸ்தான் இயக்குனர்களில் ஒருவரும் முத்து, படையப்பா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்தவரும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தின் தோல்வியைப் பற்றி பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இதை அவர் பதிவு செய்துள்ளார்.
அதில் “முதலில் லிங்கா படத்துக்கு பலூன் க்ளைமேக்ஸ் இல்லை. வேறு ஒன்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ரஜினி சார் படம் பார்த்திவிட்டு லிங்கேசன் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சொல்லிவிட்டார். அதனால் இரண்டாம் பாதியில் இளைய ரஜினிக்கு காட்சிகள் இல்லை.
இதனால் திட்டமிட்ட க்ளைமேக்ஸை மாற்றினோம். எங்கள் இயக்குனர் குழுவில் யாருக்கும் அந்த க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை. ரஜினி சாரின் பிறந்தநாளுக்கு படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்ற அழுத்தம் வேறு இருந்தது” எனக் கூறியுள்ளார்.