ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்! தேனி வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் தகவல்!!
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் கூறினார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 09.03.2022 அன்று ஆணை பிறப்பித்தது.
அரசு வெளியிட்ட ஆணையின்படி 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும் அல்லது மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீர்; விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றால் அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம் ஆகிய 3 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர்; பாதுகாப்பாக உள்ள 5 குறுவட்டங்களில் ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேற்படி வட்டாரங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம். அகமலை, சின்னஓவுலாபுரம்;, ஆங்கூர்பாளையம், சிலமரத்துப்பட்டி, மணியம்பட்டி, பூலானந்தபுரம், அணைக்கரைபட்டி, நாகலாபுரம், முத்துலாபுரம், புலிக்குத்தி, அய்யம்பட்டி, குள்ளப்பகவுண்டன் பட்டி, ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பட்டா நிலமுள்ள சிறு-குறு ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் அருகாமையிலுள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, உத்தமபாளையம் (9486363555) அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு தேனி செயற்பொறியாளர் (பொ.) கேட்டுக் கொண்டுள்ளார்.