இன்றைய ஆன்மீகத் தகவல்: திருவெம்பாவை
திருவெம்பாவை பாடல் 2
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பொருள்:
“”அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது “ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள்.
அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.
விளக்கம்:
தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.