ஆசைப்பட்டது மோசமாகிவிட்டது! ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி!
கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள நெடுங்கண்டத்தை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணன். இவர் தனது கணவருக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி ஆன்லைன் வழியாக ரூ 16,999 விலை மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா கிருஷ்ணனின் பெயரில் அவரது வீட்டிற்கு ஒரு கொரியர் வந்தது.அந்த கொரியர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போன் என நினைத்து அதனை அவர் வங்கிக் கொண்டு அதற்கான பரிமாற்ற கட்டணம் ரூ.17,028 செலுத்தியுள்ளார்.
அதனைதொடர்ந்து கொரியரை பிரித்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் ரூ.16,999 விலை மதிப்புள்ள செல்போனுக்கு பதிலாக அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது காலாவதியான 3 பவுடர் டப்பாக்கள்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அஞ்சனா கிருஷ்ணன் ஆன்லைன் நிறுவனத்திடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஆன்லைன் நிறுவனம் கொரியரில் இருந்த 3 பவுடர் டப்பாக்களையும் படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளது.
இதைதொடர்ந்து அஞ்சனா கிருஷ்ணன் நெடுங்கண்டம் போலீஸ் மற்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து நெடுங்கண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.