நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்
நடிகர் சூரி மதுரையில் சில இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார்.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன் உணவகம்’ என்ற பெயரில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். அதில் காமராஜர் நகர் பகுதியில் உள்ள உணவகத்தில் நேற்றிரவு வணிகவரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
உணவகத்துக்காக வாங்கிய பொருட்களுக்கு வணிக வரி கட்டவில்லை என்பதால் இந்த ரெய்ட் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகாரிகள் சில ஆவணங்களைக் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. அது சம்மந்தமாக ஹோட்டல் சார்பாக இன்று வணிக வரித்துறை அலுவலகத்தில் விளக்கம் அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக நடிகர் சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தனக்கு நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்துவிட்டதாகக் கூறி அவர் மேல் போலிஸில் வழக்கு பதிவு செய்து சர்ச்சையில் சிக்கினார். இது சம்மந்தமாக விஷ்ணு விஷாலுக்கும் அவருக்கும் இடையே மோதல் எழுந்தது. அந்த சர்ச்சையை அடுத்து இப்போது சூரி மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.