பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து புதிய தலைமை தளபதியை நியமிக்க வசதியாக ஒரு புதிய பதவியை உருவாக்கவும் அவரே பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராக இருப்பார் என்றும், பாதுகாப்பு அமைச்சகம் முன்மொழிந்த பரிந்துரை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1999-ஆம் ஆண்டில் கார்கில் போருக்கு பிறகு இந்திய அரசு நியமித்த உயர்நிலைக்குழு, முப்படைகளின் தேவை கருதியும் தேச பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், அரசுக்கும் முப்படைகளுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்பட்டு ஆலோசனை வழங்க உயர்நிலை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,”முப்படைகளுக்கு தலைமை தளபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், இதற்காக குழு அமைக்கப்பட்டு விரிவான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதன்படி முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், இது குறித்து பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் தலைமை தளபதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரங்களுக்கான துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராகவும் தலைமை தளபதி செயல்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவம், கடற்படை விமானப்படை தளபதிகளை போல் தலைமை தளபதியும் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்று செயல்படுவார். இதுதொடர்பான தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பதவியை ஏற்கப்போவது யார் என்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.