மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

0
168
Anbumani Ramadoss
Anbumani Ramadoss

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தாலும், அது இன்னும் செயல்பாட்டுக்கு வராததால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் செயல் வடிவம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், உக்ரைன், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படித்து திரும்புகின்றனர். அவ்வாறு மருத்துவம் படித்த மாணவர்கள் மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (Foreign Medical Graduates Examination) வெற்றி பெற வேண்டும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு ஆண்டுகள் பயிற்சி முடித்த பிறகு தான் மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராகவே பதிவு செய்து கொள்ள முடியும்.

தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்று மருத்துவம் படித்து, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்விலும் வெற்றி பெற்ற 600-க்கும் மேற்பட்டோர் இரு காரணங்களால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர். அவற்றில் முதன்மையானது, வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும்.

இந்த மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டில் இருந்து 7.5% ஆக குறைக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கான பயிற்சி இடங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதுவும் வாக்குறுதியாகவே இருப்பதால் மருத்துவ மாணவர்களின் பிரச்சினை தீரவில்லை.

இரண்டாவதாக, வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சமும், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற ரூ.3.20 லட்சமும் செலுத்த வேண்டும். இந்தியாவில் பணம் செலுத்தி மருத்துவம் படிக்க வழியில்லாத மாணவர்கள் தான் குறைந்த செலவில் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்களிடம் பயிற்சிக்காக ரூ.5.20 லட்சம் வசூலிப்பது நியாயமற்றது என்பதை சுட்டிக்காட்டிய பிறகு மருத்துகக் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து விட்ட தமிழக அரசு, பல்கலைக்கழகத்திற்கு கட்ட வேண்டிய தொகையையும் ரூ.30 ஆயிரமாக குறைத்து கடந்த ஜூலை 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படாதது தான் சிக்கலுக்கு காரணம். வெளிநாடுகளில் மருத்துவம் பயில ஒவ்வொரு மாணவரும் 6 ஆண்டுகள் வரை செலவிட வேண்டும்.

அதன்பின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் வெற்றி பெற 2-3 ஆண்டுகள் ஆகக் கூடும். அவ்வாறு 9 ஆண்டுகளை செலவு செய்த அவர்கள், கடந்த ஓராண்டாக பயிற்சி பெற முடியவில்லை. இளநிலை மருத்துவப் படிப்புக்காக இதுவரை 10 ஆண்டுகளை செலவழித்து விட்ட அவர்கள், இப்போதே பயிற்சி தொடங்கினால் கூட இன்னும் இரு ஆண்டுகள் கழித்து தான் இளநிலை மருத்துவராக பதிவு செய்ய முடியும். இதுவே மிக நீண்ட காலம் ஆகும்.

இத்தகைய சூழலில் மருத்துவப் பயிற்சிக்கான கூடுதல் இடங்களை உருவாக்குவதிலும், கட்டணக் குறைப்பை செயல்படுத்துவதிலும் தமிழக அரசு செய்யும் ஒவ்வொரு நாள் தாமதமும் அவர்களின் வாழ்க்கையில் பாதிப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து பேசி ஒரு மணி நேரத்தில் உரிய அரசாணைகளை பிறப்பிக்கச் செய்ய முடியும்.

மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த இந்த விவகாரம் தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று என்பதால், தமிழக முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஇந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!
Next articleஇயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!