ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி
ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்ததால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மக்கள் தொகை பெருக்க அந்நாடு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த 1899ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டு 8 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும், கடந்த நூறு ஆண்டுகளில் மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் இந்த ஆண்டுதான் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஒரு பக்கம் தொழில் வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஜப்பான் நாடு, மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருவது அரசின் கவலையை அதிகரித்துள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் குழந்தைகள் பிறப்பு மிக குறைந்துள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.