விக்ரம் கலெக்ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா?
விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வெளியாகி வெற்றிகரமாக முதல் வார இறுதியான 3 நாட்களில் 200 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது வாரத் தொடக்கத்திலும், படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் வசூல் குறையவில்லை. இந்நிலையில் இப்படியே சென்றால் பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வசூலை 10 நாட்களிலேயே மிஞ்சிவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் வெற்றிப்படமாக அமைந்த பொன்னியின் செல்வன் மைல்கல் வெற்றியாகவும் அமைந்துள்ளது.