ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கடந்த மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதையடுத்து தற்போது நடந்துள்ள மகளிருக்கான ஆசியக் கோப்பை தொடரை வென்றுள்ளது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும், இந்திய அணியும் மோதின. 8 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
பேட் செய்ய வந்த இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். இலங்கை வீராங்கனைகளை சொற்ப ரன்களில் அவுட் ஆக்கி வெளியேற்றினர். இதனால் இலங்கை 9 ஓவர்கள் மட்டுமே பேட் செய்து 65 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ரேனுகா சிங் 3 விக்கெட்களும், கயாக்வாட் மற்றும் ஸ்னே ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர்.
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 8.3 ஓவர்களில் 71 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனைப் படைத்துள்ளது.