பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு
பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை எட்டாவது முறையாக நீட்டித்து சிபிடிடி என்ற மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவின் படி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில் தற்போது அதை நீட்டித்து வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் முதன் முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆதார் மற்றும் பான் எண் இணைப்பிற்கான கால அவகாசமானது பல முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.
மேலும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுக்குப் பதிலாக சம்பந்தப்பட்டவரின் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது என்று மத்திய பொது பட்ஜெட்டில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.