ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

0
112
IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today
IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

நாளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த கட்டண உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை ரயில்வே துறையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் வரையிலுள்ள நடப்பு நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.19 ஆயிரத்து 412 கோடி தான் சரக்கு போக்குவரத்தில் வருவாயாக கிடைத்துள்ளது. இந்த வருவாய் ரயில்வே திட்டமிட்டதைக் காட்டிலும் மிகக்குறைவு என்று கூறபடுகிறது.

மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் மூலம் வரும் வருமானமும் உயரவில்லை என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய ரூ.1.18 லட்சம் கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் ரூ.99 ஆயிரத்து 223 கோடி மட்டுமே இதன் மூலமாக கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால், முன்னதாக செலவிற்காக ரூ.97 ஆயிரத்து 265 என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 99 கோடி வரை செலவாகியுள்ளது. இதனால் வழக்கமான பயணிகள் இயக்கத்துக்கான செயல்பாட்டிற்கான இயக்க செலவைக் கூட சமாளிக்க முடியாமல் ரயில்வே துறையானது திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தையும் குறிப்பிட்ட அளவு உயர்த்த ரயில்வே துறை ஆலோசித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி பயணிகள் ரயில் கட்டணத்தை அதிரடியாக ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, புறநகர் ரயில்கள், புறநகர் ரயில்கள் சீசன் டிக்கெட் ஆகியவற்றின் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், ” ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துதல், நவீனப் பெட்டிகள் உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமாக பயணிகளுக்கு நிறைய வசதிகளை ரயில்வே துறையானது செய்து வருகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக கட்டணம் குறைந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக எந்த வகுப்புப் பயணிகளையும் பாதிக்காத வகையில் கட்டண உயர்வானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அறிவித்துள்ளது.

புறநகர் அல்லாத மற்ற பயணிகள் ரயில் கட்டணமானது கிலோ மீட்டருக்கு ஒரு பைசா என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் மூலமாக குளிர்சாதன வசதி அல்லாத 2 ஆம் வகுப்பு அமர்வு, 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா என்ற கணக்கில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

அதே போல மெயில் ,எக்ஸ்பிரஸ் குளிர்சாதன வசதி அல்லாத 2 ஆம் வகுப்பு அமர்வு, 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு ஆகியவற்றின் டிக்கெட் கட்டணமும் கிலோ மீட்டருக்கு 2 பைசா என்ற அளவில் இதன் மூலமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக குளிர்சாதன வகுப்புகளில் ஏ.சி. சேர் கார், ஏ.சி.3 அடுக்கு படுக்கை வசதி, ஏசி 2 படுக்கை வசதி மற்றும் ஏசி முதல் வகுப்பு போன்றவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ உள்ளிட்ட ரயில்களின் டிக்கெட் கட்டணமும் இதன் மூலமாக உயர்த்தப்படுகிறது.

கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தான் கடைசியாக அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் சரக்குக் கட்டணமும் 6.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே கட்டணம் எதுவும் நேரடியாக உயர்த்தப்படவில்லை.

இதற்கு மாறாக பிளக்ஸி பேர் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு அதன் மூலமாக ஒரு சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக சுவிதா எஸ்பிரஸ், வந்தே பாரத் மற்றும் தேஜாஸ் போன்றவற்றில் மற்ற ரயில்களைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

author avatar
Parthipan K