அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓமந்தூர் மருத்துவமனையில் தொடங்கி உள்ள ரூ25 லட்சத்தில் ரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி ,ரூ 7லட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் கருவி,மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு பெண்களுக்கான ஆலோசனை சிகிச்சை மையம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய உதவும் வலைத்தளம் ஆகியவையை தொடங்கி வைத்துள்ளேன் என கூறினார்.
மேலும் அவர் இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ரூ 7 லட்சம் மதிப்புடைய கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் கண்டறியும் அதிநவீன உபகரணம் மூலமாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே ரூ 5000 செலவு செய்து கண்டறிவதை இங்கு முற்றிலும் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது.
ரோட்டரி பங்களிப்புடன் ரூ 25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட ரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி மூலம் நீண்ட நாள் வலி மற்றும் புற்றுநோய் வழிகளை நீக்க முடியும்.இந்த சிகிச்சையானது அறுவை சிகிச்சை இல்லாமல் வலி நீக்கும் முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது.
நுண்ணிய ஊசி மூலம் வலி உண்டாகும் நரம்புகளில் ரேடியோ அலையை செலுத்தி வலிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ 40,000 வரை செலவாகும் இந்த சிகிச்சை முறைகள் இலவசமாக வலி நிவாரணம் மற்றும் நோய்த் தணிப்பு பிரிவில் வழங்கபடுகிறது.
மாதவிடாய் நின்ற பிறகு வரும் காலகட்டத்தில் பெண்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கும் மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் இந்த மையத்தில் யோகா ,இயற்கை உணவு முறை ,மன நல ஆலோசனை மற்றும் மார்பகப் புற்றுநோய்கண்டறியும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு ஸ்டான்லி மருத்ந்துவமனையில் ரூ 1000செலவில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முன்பதிவு செய்யும் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அதற்கான குறுஞ்செய்தி உரியவர்களுக்கு அனுப்பப்படும்.மேலும் பரிசோதனையின் முடிவுகளை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.அதனை பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.