இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

0
194

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

நா முத்துக்குமார் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவிஞராக செயல்பட்டு வந்தவர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் நா முத்துக்குமார். ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் ஆசிரியர் ஆக வேண்டுமென்பதற்காக பாதையை மாற்றிக்கொண்டார். சீமான் இயக்கிய வீரநடை படத்தில் முதல் முதலில் பாடல் எழுதி பாடல் ஆசிரியர் பயணத்தை தொடங்கினார்.

இளையராஜா இசையில் பாலுமகேந்திரா இயக்கிய ஜூலி கணபதி படத்தின் ‘எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே’ என்ற பாடல் அவருக்கு அடையாளத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் 2000களின் தொடக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜா, ஏ ஆர் ரஹ்மான் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் பாடல்களை எழுதினார்.

குறிப்பாக இயக்குனர் ராம், இயக்குனர் செல்வராகவன் மற்றும் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோரின் படங்களில் அவர் எழுதிய பாடல்கள் நீங்காப் புகழ் பெற்றவையாக அமைந்தன. தங்கமீன்கள் மற்றும் சைவம் ஆகிய படங்களின் பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவர் தேசிய விருது பெற்றார்.

ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதும் பாடல் ஆசிரியராக இருந்த முத்துக்குமார் 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் பெயரில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. அவரின் கவிதை தொகுப்பில் இருந்து ‘திகட்ட திகட்ட காதல்’ என்ற கவிதையை இப்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கும் அநீதி படத்தில் ஜி வி பிரகாஷ் பயன்படுத்தியுள்ளார். இந்த பாடலை இன்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.