ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான், கவனமாக படியுங்கள். இப்போது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் மூலமாக IRCTC ரயில் பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்கியுள்ளது, அதாவது பயணிகள் ஒரு மாதத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய விதியின் கீழ் நீங்கள் உங்களது ஆதார் அட்டையை IRCTC உடன் இணைத்திருந்தால் பலவித நன்மைகள் கிடைக்கும்.
முன்னர் இருந்த விதிகளின்படி IRCTC கணக்கிலிருந்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் ஆனால் IRCTC ஐடியை ஆதார் அட்டையுடன் இணைத்திருந்தால் மட்டுமே ஒரு மாதத்தில் நீங்கள் சுமார் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்து வந்தது. ஆனால் தற்போது IRCTC ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின்படி, நீங்கள் ஒரு ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். மேலும் உங்கள் ஆதார் அட்டையை IRCTC உடன் இணைத்து கொள்ளாவிட்டாலும் நீங்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
IRCTC உடன் ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை:
1) முதலில் IRCTC-ன் அதிகாரப்பூர்வ மின்-டிக்கெட் இணையதளமான irctc.co.in க்குச் செல்ல வேண்டும்.
2) பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
3) இப்போது ‘My Account’ பகுதிக்குச் சென்று, ‘Aadhaar KYC’ என்பதைக் கிளிக் செய்யவும்.
4) பிறகு, ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
5) இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி-யை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
6) ஆதார் தொடர்பான தகவல்களை சரிபார்த்த பிறகு, ‘Verify’ என்பதைக் கிளிக் செய்யவும்.
7) இறுதியாக KYC விவரங்கள் வெற்றிகரமாக அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாக உங்கள் மொபைலுக்கு செய்தி அனுப்பப்படும்.