புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற பெயரே, எம்.ஜி.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. (17.01.1917 – 24.12.1987) தனது ஆரம்ப காலத்தில் நாடக மேடைகளில் நடித்தார். தேச தந்தை மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து அரசியல் வாழ்க்கை தொடர்ந்தார்.
1936 ஆம் வருடம் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகன் ஆனார். 1950 ஆம் ஆண்டிற்கு பிறகு எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை ஏறு முகமாகவே இருந்தது. பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதிக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலக்கப்பட்டார்.
இதன்பிறகு, 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனியே கட்சி தொடங்கினார். முதன் முதலாக தேர்தலிம் போட்டியிட்ட போது திண்டுக்கல்லில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. 1977 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. (1984)
இவரது ஆட்சியில்: சத்துணவு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்குதல், விதவை பெண்களுக்கு திருமண உதவி, தாய் சேய் நல இல்லங்கள், மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குதல், இலவச பாடநூல் வழங்கும் திட்டம் என மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இலங்கையில் உள்ள விடுதலை புலிகளின் அமைப்பிற்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்தவர். எம்.ஜி.ஆர் இலங்கை கண்டியில் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழீழ போராளி பிரபாகரனுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்து உதவி செய்தவர் தமிழகத்தில் புலிகள் வந்து செல்லும் போது எந்த சட்ட சிக்கலும் வராமல் பார்த்துக் கொண்டவர்.
திரைத்துறையில் மக்கள் திலகம், புரட்சி தலைவன், இதயக்கனி போன்ற பல்வேறு பட்டங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்திய அரசின் விருதான “பாரத ரத்னா” அண்ணா விருது, பத்மஸ்ரீ விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்று மக்கள் மனதில் நிலைத்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களுக்கு எத்தனையோ நல்திட்டங்களை வகுத்தவர். ஒரு மனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பதை விட, எப்படி வாழ்ந்தான் என்பதை நிஜத்தில் வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் தமிழகம் முழுக்க சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. மக்கள் திலகத்தை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.