திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2.20 லட்சம் டிக்கெட்கள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைன் மூலமாக வெளியானது.இதனுடன் ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டது.
மேலும் திருப்பதியில் ஒன்பது இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான பத்து நாட்களுக்கான இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வரும் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய நிலையில் முதலில் வரும் பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.முககவசம் அணிவது சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற வழிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் மூலம் வைகுண்ட ஏகாதசி நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று பக்தர்கள் கவலையடைந்தனர்.மேலும் இந்நிலையில் தேவஸ்தானம் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு வைகுண்ட ஏகாதசி 11 நாட்களுக்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என தவறுதலாக இணையத்தில் வெளியிடப்பட்டது.மேலும் மத்திய அரசு மாநில அரசிற்கு எவ்வித நிபந்தனைகளும், வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடாததால் பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.