இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்!
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு ஸ்மார்ட்போன்குள் அடங்கிவிட்டது. அந்த வகையில் நாம் ஒரு பொருளை பெற வேண்டும் என்றாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும். அந்த பொருளானது நம்முடைய வீடு தேடி வந்துவிடும். ஆனால் இது போன்ற வலைதளங்களின் மூலமாக ஆபத்தும் அதிகம் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பெருமாநல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட எஸ்பி சாய் இடம் புகார் அளித்தார்.
அதனையடுத்து பொதுமக்களை கடன் செயலி மூலம் ஏமாற்றி பண மோசடி மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையின் மூலம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். மேலும் தனிப்படை போலீசார் மோசடி கும்பல் யார் என்று விசாரணை நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களது செல்போன் எண்ணின் சிக்னலை ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவது செல்போன் சிக்னலின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து போலீஸா காதர்ப்பேட்டையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ஒரு கட்டிடத்தில் கால் சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரைச் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் கேரளா மாநில கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது அஸ்கார், முகமது ஷாபி, முகமது சலீம், அனிஸ்மோன், அஷ்ரப் என்பதும் தெரியவந்தது.
அந்த ஐந்து பேரும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க ஆறு இணையதள மோடம், 3 லேப்டாப்கள் ,11 சிம் பாக்ஸ் மற்றும் 500 சிம் கார்டுகள் வைத்திருந்தார்கள். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருப்பூர் காதர் பேட்டையில் கால் சென்டர் அமைத்திருந்த அவர்கள் நாளொன்றுக்கு 3500 பேரை தொடர்பு கொண்டு இவர்களுக்கு ஸ்பீட் லோன், கேண்டிடே ஈஸிலோன், லக்கி மணி என்ற 4 வெளிநாட்டு கடன் செயலி மூலம் ரூ 3000 முதல் 15 ஆயிரம் வரை கடன் வழங்குவதாக கூறியுள்ளனர்.
அதனை பெற விரும்பினால் இமெயில் முகவரி, ஆதார் கார்டு எண், புகைப்படம் போன்றவற்றை வழங்க வேண்டும் என கூறி அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். கடன் பெற்றவர்கள் கடனை இரண்டு வாரத்தில் செலுத்தியும் அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கு வரவில்லை எனவே பணத்தை திரும்ப அனுப்புங்கள் இல்லையெனில் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்சிங் செய்து உங்களது உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இவ்வாறு மிரட்டுவதினால் அச்சமடைந்து பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் அப்படி யாராவது போன் செய்தால் 1930 போன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என கூறப்பட்டது. கைதானவர்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக திருப்பூர் காதர்ப்பேட்டையில் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.