ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 வது பிறந்தநாள் இன்று!!
சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அர்பணித்துக் கொண்டவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்காற்றியவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். ஒரிசாவில் உள்ள கட்டாக் என்னும் ஊரில் ஜனவரி 23 ஆம் தேதி 1897 ஆம் ஆண்டு பிறந்தார். ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி என்கிற தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தவர். இவருக்கு 8 சகோதரர்கள், 6 சகோதரிகள் இருந்தனர்.
நேதாஜி அவர்கள், கட்டாக்கில் உள்ள பாப்டிஸ்ட் மிஷன் என்ற ஆரம்ப பள்ளியில் பயின்றார். பின்பு 1913 ல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர்கல்வியை பயின்றார். படிப்பில் மிகச்சிறந்த மாணவராக திகழ்ந்தார். சிறுவயதில் இருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீக கொள்கைகளில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா ப்ரெசிடன்சி கல்லூரியில் சேர்ந்த அவர், சி.எஃப் ஓட்டன் என்ற ஆசிரியரின் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
பின்னர், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இளங்கலை பட்டமும், பெற்றோரின் விருப்பத்தின் பேரில், 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்விற்காக லண்டனுக்கு சென்று படித்து ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவராக தேர்ச்சி பெற்றார். 1919 ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நேதாஜி அவர்களின் மனதை பாதித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட தூண்டுகோலாய் அமைந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலே ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமாகும். இச்சம்பவத்தை அறிந்த நேதாஜி தனது லண்டன் பணியை துறந்து இந்தியாவிற்கு திரும்பினார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்த நேதாஜி, சி.ஆர் தாசை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு “வேல்ஸ்” என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்தது. வேல்ஸ் வருகையை எதிர்த்து, நேதாஜி தலைமையில் கொல்கத்தா தொண்டர் படையும், பல்வேறு காங்கிரஸ் தொண்டர்களும் போராடியதால் ஆங்கில அரசு இவர்களை கைது செய்தது.
சுதந்திரத்தை விரைவில் பெறுவதற்கு தேர்தல் மூலம் சட்டசபைகளை கைப்பற்ற வேண்டும் என்று சி.ஆர்.தாஸும், நேருவும் கருதியதை ஏற்காத காந்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு காட்டினர். இதன் காரணமாகவே சி.ஆர்.தாஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகி சுயாட்சிக் கட்சியை தொடங்கினார். மேலும் சுயராஜ்யா என்ற பத்திரிகையை தொடங்கி நேதாஜியின் தலைமையில் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
காந்தியின் தலைமையில் 1928 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவு தவறானது என்று நேதாஜி குறிப்பிட்டார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி போன்ற பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைக்க, அதுவே பின்பு காதலாக மாறியதால் 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனிதாபோஸ் என்ற மகளும் பிறந்தார்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1938 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் தீவிரவாதிதான் எல்லாம் கிடைக்க வேண்டும் இல்லையேல், எதுவும் தேவையில்லை என்று போராட்ட கொள்கையை முழங்கினார். சுபாஷ் காங்கிரஸ் தலைவரான பிறகு ரவீந்திரநாத் தாகூர் அவரை அழைத்து நேதாஜி என்கிற பட்டத்தை சூட்டினார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக நேதாஜி போட்டியிட்டார். இவரது செல்வாக்கு மக்களிடையே உயர்ந்து வருவதை கண்ட காந்திஜி, அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தினார். முடிவில் காந்தியில் வேட்பாளர் தோல்வியை தழுவியதால் காந்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இந்த கசப்பான சம்பவங்களின் காரணமாக நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து தாமாகவே வெளியேறினார். கட்சியில் நேதாஜிக்கு ஏற்பட்ட பெரும் ஆதரவு காந்திக்கு பிடிக்கவில்லை என்பதும் நேதாஜி வெளியேற ஒரு காரணமாகிவிட்டது.
பிரிட்டன் அரசுக்கு எதிராக மக்களை திரட்டுவதாக கூறி 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நேதாஜியை கைது செய்தது. இதையடுத்து 1941 ஆம் ஆண்டு மாறுவேடத்தின் மூலமாக சிறையிலிருந்து தப்பிச்சென்று பெஷாவர் வழியாக காபூல் அடைந்து, கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். பின்னர் இந்துகுஷ் கணவாய் வழியே ரஷ்யாவை அடைந்ததும், எதிர்பாராத ஹிட்லரின் அழைப்பை ஏற்று ஜெர்மனியின் மாஸ்கோ சென்று இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் எடுத்து கூறி அவருடைய உதவியைக் கோரினார்.
இதனையடுத்து, சுதந்திர இந்திய மையம் என்கிற அமைப்பை தொடங்கினார். சுதந்திர இந்திய வானொலியில் உலகப்போர் பற்றிய செய்திகளையும், இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றிய செய்திகளையும் ஒளிபரப்பினார். ஜெர்மனி அயலுறவுத் துறையின் மூலம் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிரூட்டப்பட்டது. 1943 ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார்.
1944 ல் இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்தார். இதில் நேதாஜியின் படை தோல்வியைத் தழுவியது. பின்னடைவு இருந்தும் மனம் தளராத நேதாஜி, தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைய வேண்டாம். இந்தியாவை நிரந்தரமாக அடிமை தளத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் உலகத்தில் எந்த சக்திக்கும் இல்லை என்றும் கடைசியில் “ஜெய்ஹிந்த்” என்று முழக்கமிட்டார். அவரின் எண்ணத்தைப் போலவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது.
நேதாஜ சுபாஷ் சந்திரபோஸ் 1945 ஆம் ஆண்டு விமான பயணம் செய்தபோது பர்மோசா தீவுக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகியதில் அவர் இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலி நிலையம் அறிவித்தது. இந்த துயர செய்தியை கேட்டு இந்திய மக்கள் பெரும் வேதனை அடைந்தனர். நேதாஜி இறந்துவிட்டதை இன்னும் பலர் நம்பவில்லை, இன்றுவரை அவருடைய மரணம் மர்மமாகவே இருந்து வருகிறுது.
இந்திய நாட்டிற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மாவீரன் “சுபாஷ் சந்திரபோஸ்” அவர்களின் 123 வது பிறந்தநாள் இன்று. “எனக்கு கொஞ்சம் ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன்” என்று கூறிய புரட்சி நாயகன் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் புரட்சிகரமான விதையை விதைத்துள்ளார் என்பதே வரலாற்று உண்மை.