ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்! 

0
210

ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்! 

பொருளாதார மந்தநிலையால் பெரு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, அரசியல் நிலைத்தன்மை, போன்ற காரணங்களால் 2022 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரம் மிகுந்த மந்த நிலையை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2023- இல் 3-இல் 1 பங்கு உலகப் பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு பெரு நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தங்களது ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அதேபோல் அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதேபோல் அமேசான் நிறுவனமும் கணிசமான அளவில் பணியாளர்களை குறைத்துள்ளது.

கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நேற்று 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில் இன்று பிரபலமான ஐடி நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ இன்று 452 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அந்த நிறுவனத்தின் புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்களில் இன்டர்னல் தேர்வில் தோல்வியுற்று குறைவான செயல் திறனை வெளிப்படுத்திய 452 பேரை பணி நீக்கம் செய்வதாக அந்த நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனத்தில் சேர்வதற்காக வழங்கப்படும் பயிற்சி கட்டணம் ரூ 75 ஆயிரத்தை ஊழியர்கள் திருப்பி செலுத்த வேண்டாம் எனவும் அதை தள்ளுபடி செய்வதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்தது.

உலகம் முழுவதிலும் இவ்வாறான பெரு நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

Previous articleஇடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 
Next articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும் நாள்!!