ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!!
தமிழின வரலாற்றில் மிக முக்கியன போராட்டம் மொழிப்போர் போராட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு செய்த காரணத்தால் தமிழர்கள் வெகுண்டெழுந்து வெற்றிபெற்ற போராட்டமே இந்தி எதிர்ப்பு போராட்டம்.
1937 – ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி இந்தி கட்டாய பாடம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மொழித் திணிப்பு மட்டுமல்ல, தமிழினத்திற்கான அடக்குமுறை என்று பல்வேறு கருத்துகள் வெளியானது. இந்தியை திணிப்பதால் தமிழ் மொழி சிதைவு, பண்பாடு, இலக்கியம், தமிழரின் தொன்மையான கலை அழிய நேரிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது.
இந்தி திணிப்பு தமிழ்மொழியை அழிக்கும் முயற்சி என்று கூறி மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்திரபாண்டியன், சோமசுந்தர பாரதியார், உமா மகேசுவரனார், பட்டுக்கோட்டை அழகிரி, அண்ணா, கருணாநிதி, சண்முகானந்த அடிகள் போன்ற பல்வேறு அறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1937 ஆம் ஆண்டு திசம்பர் 26 ஆம் தேசி கி.ஆ.பெ.விசுவநாதம் திருச்சியில் இந்தி திணிப்பிற்கு எதிரான முதல் மாநாட்டை நடத்தினார்.
முதல் சம்பவம்: 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை பெரியார் முன்வைத்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், நடராஜன் மற்றும் தாளமுத்து என்னும் தமிழ் பற்றாளர்கள் பலியாயினர். 1948 ஆம் ஆண்டு ஓமந்தூர் ரெட்டியார் தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் என்று அறிவித்தார். கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு இந்தி திணிப்பு கைவிடப்பட்டது.
இரண்டாவது சம்பவம்: மேலும் இந்தியை கட்டாயமாக திணிக்கும் முயற்சி 1952 ல் இருந்து 1964 வரை தீவிரமாக உருவானது. இதற்கு எதிரான போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தது. 1964 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்புக்கான போராட்டம் தீவிரமடைந்து, தமிழ்நாடு முழுக்க பல்வேறு தலைவர்களால் இந்தி எதிர்ப்பு போரட்டக் களமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்போதைய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
கைது சம்பவத்திற்கு பிறகு, மாணவர்கள் போராட்ட களத்தில் குதிக்க ஆரம்பித்தனர். ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அப்போதைய அரசால் தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டம் மேலும் தமிழகம் முழுக்க வெடித்தது. தாக்குதல் நடந்தாலும் போராட்டத்தில் இருந்து மாணவர்கள் பின்வாங்கவில்லை.
உயிர்நீத்த தியாகிகள் : 1964 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தமிழ் மொழியின் மீது பற்று கொண்ட கீழப்பழுவூர் சின்னசாமி என்பவர் திருச்சி ரயில்வே சந்திப்புக்கு அருகே “தமிழ் வாழ்க” இந்து ஒழிக என்று முழக்கமிட்டு தீக்குளித்து இறந்து போனார். இவரை அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் விஷம் குடித்தும், தீக்குளித்தும் தமிழ் மொழிக்காக உயிரை விட்டனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக உயிர்விட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்தி திணிப்பு முழுவதுமாக கைவிடப்பட்டது. மொழிப் போரில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக வருடந்தோறும் ஜனவரி 25 ஆம் தேதி “மொழிப்போர்” தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இறந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஊதியம், வேலைவாய்ப்பை அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழிதான் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், நீதிமொழியாகவும் வரவேண்டும், இதுவே மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று தியாகிகளின் குடும்பத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகவும் உள்ளது.