இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதன்பிறகு “கையோடு கைகோர்ப்போம்” என ராகுல் காந்தியின் கருத்துக்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றிபெறுவார் என்று கூறினார். மேலும் அதிமுகவில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணம் பாஜக தான் என்றும் இதுபோல தான் மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக வீழ்த்தியது என்றும் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
மேலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல் இடைத்தேர்தலிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார் என்று கூறினார்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார் எனவும் அவர் கூறினார்.