திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்- பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் இன்று நாடே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிில் எதிரொலிக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட திமுக கிள்ளி போடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்ததாக இருக்கிறது. அதனால் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு விசைத்தறி உற்பத்தியாளர்கள், மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் பொறுப்பேற்றவுடன் இலவச வேட்டி சேலை வழங்கப்படுவதில்லை.
இதனால் விசைத்தறி கூடங்கள் வேலையில்லாமல் மூடப்பட்டு வருகின்றன. தேர்தலில் வாக்களிக்க திமுகவினர் வந்து பணம் கொடுத்து வாக்கு கேட்டால் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் தான். ஆனால் ஓட்டை அதிமுகவின் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மின் கட்டண உயர்வை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. அதோடு சொத்து வரியும் உயர்ந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மறந்துவிட்டனர். தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், இலவச மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து நலதிட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
அதை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை. எழுதாத பேனாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. திமுகவின் பயமே நமக்கான வெற்றி என எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியுள்ளார்.