தண்ணி காட்டும் பாஜக! எதுவா இருந்தாலும் பார்த்துக் கொள்ள தயார் என எடப்பாடி தரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக தரப்பில் இருந்து மூத்த தலைவர்கள் யாரும் இன்னும் செல்லவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் அதிமுகவினர் உள்ளனர். ஆரம்பத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியானது.
பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜக உழைக்கும் என்று அண்ணாமலை அறிவித்தார். ஆரம்பத்தில் ஓபிஎஸ், எடப்பாடி, பாஜக என 3 தரப்புமே இடைத்தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வந்தார். 3 தரப்புமே தீவிரமாக ஆலோசித்து வந்தனர். இதில் அதிமுகவின் 2 அணிகளும் தனித்தனியாக பாஜகவின் ஆதரவை நாடினார்கள்.
ஒரு கட்டத்தில் பாஜகவை இபிஎஸ் அணி கழற்றிவிட்டது. தேர்தல் பணிக்குழு பேனரில் கூட்டணியை மாற்றியது பெரிதும் பேசப்பட்டது. ஆனால் எப்போதும் போல ஓபிஎஸ் தரப்பினர் மட்டும் பாஜகவின் ஆதரவுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிமுகவின் 2 அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. பின்னர் உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு, ஓபிஎஸ் அணி தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது.
இரட்டை இலை சின்னம் இபிஎஸ்க்கு கிடைத்ததால், பாஜகவும் வேறு வழியின்றி கடைசி நேரத்தில் தன்னுடைய ஆதரவை அதிமுகவுக்கு தந்தது. தமாகா, புதிய தமிழகம், ஏசி சண்முகம், பாரிவேந்தர் என பலரும் திரண்டு இபிஎஸ் அணிக்கு ஆதரவு தந்துள்ளனர். இதையடுத்து, இபிஎஸ் தலைமையில் அதிமுக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாஜக மட்டும் இதுவரை தேர்தல் பிரச்சாரம் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. பாஜக மாநில முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை பிரச்சாரத்திற்கு செல்லாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தரப்பினரை இபிஎஸ் தரப்பினர் பிரச்சாரத்திற்கு அழைக்கவே இல்லை. ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மட்டுமே வந்து கலந்து கொண்டுள்ளார். பிரச்சாரத்தில் பாஜக கொடியை பார்க்கவே முடியவில்லை என பலரும் கூறி வருகின்றனர். இதனால் இபிஎஸ் அணியை தமிழக பாஜக புறக்கணிக்கிறதா என்று சந்தேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதையெல்லாம் இபிஎஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற தீவிரமாக இபிஎஸ் அணியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.