தமிழ் குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் தமிழுக்கு ஆற்றிய பணிகள்!
இன்று உலக தாய்மொழி தினம். இந்த நாளில் அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையிலிருந்து மதுரை வரை ”தமிழைத் தேடி” விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் அரசியல் கலப்பற்ற, அரசியல் நோக்கமற்ற பயணம் என அவர் கூறியுள்ளார். மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தாயைக் காப்பது எப்படி தவிர்க்க முடியாத கடமையோ, அதேபோல் தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை தமிழை காக்க வேண்டியதும் கடமை ஆகும் என்று தெரிவித்துள்ளார். அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி நாளில் தொடங்குகிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழை மீட்டெடுப்பதற்காக தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ளும் ராமதாஸ் அவர்கள் தமிழர்களுக்கு அநீதி ஏற்படும் போதெல்லாம் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி, தமிழ் மொழிக்காக இதுவரை எண்ணற்ற விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் மொழி வளர்ச்சிக்காக மருத்துவர் ராமதாஸ் பொங்கு தமிழ் அறக்கட்டளையை தொடங்கினார். அலை ஓசை செய்தித்தாள், மக்கள் தொலைக்காட்சி போன்ற செய்தி ஊடகங்களை தொடங்கி அவற்றின் வழியாக பிறமொழி கலப்பில்லாத தனித்தமிழை வளர்த்தார்.தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் இதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனே பாமக நிறுவனர் ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ என்று அழைத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? கடந்த 1988ம் ஆண்டு கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ராமதாஸ் அவர்களே நேரடியாக அங்கு சென்று அந்த மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதனையடுத்து ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ அழைத்தார் திருமாவளவன். 1992ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி அதில் தமிழீழத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகு நடைபெற்ற பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்துச் சென்றார். இதற்காக அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.