ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்..
ஓபிஎஸ்க்கு அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவதால் ஓபிஎஸ் அணியினர் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகின்றனர். சமீபகாலமாகவே ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணிக்கு வருவதும் அல்லது வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது.
அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் வெவ்வேறு வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதுவும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாக தான் கருதப்பட்டது. அதோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க கூட்டணி கட்சியினர் கூட அழைக்கப்பட்டனர்.
ஆனால் ஓபிஎஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் உதவியே இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்று இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது அடுத்த அடியாக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓபிஎஸ் தரப்பினருக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் எனவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமானது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடருவார் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.