உலக கோடீஸ்வரர் பட்டியல்- 35வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி
அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.31 சரிந்து ரூ.1283 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.24 குறைந்து ரூ.462-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.35 குறைந்து ரூ.676-ஆகவும் டோட்டல் கேஸ் பங்கு ரூ.37 குறைந்து ரூ.715-ஆகவும் உள்ளது. மேலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானி 35-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் Bloomberg பணக்காரர்கள் பட்டியலின்படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 79 பில்லியன் டாலர் குறைந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 29ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று 35வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மோசடிகளில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்து அவரின் சொத்து மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன் கவுதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்திலும், ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.