திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எந்த ஒரு கோவில்களிலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் முதல் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிய தொடங்கியதால் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த டோக்கன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் மக்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வரும் பொழுது கூட்ட நெரிசலை தவிர்க்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் 300 தரிசன டிக்கெட் வெளியிட்டு வருகின்றது. மேலும் சிறப்பு நூலை வாயில் தரிசனம்,ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அங்க பிரதட்சணம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிட்டு வருகின்றது. டிக்கெட்டுகள் இல்லாமல் பக்தர்களுக்கு இலவசம் தரிசனம் வழங்கப்படுகின்றது.
இதனால் தினமும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் நாளொன்றுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருவாய் கிடைக்கின்றது.டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 90 நிமிடங்களில் அனைத்து டிக்கெட் பதிவு செய்யப்படுகின்றது. அதேபோல தினமும் 150 பேர் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 60 நாட்களுக்கு 15000 டிக்கெட் வெளியிடப்பட்ட ஐந்து நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது போலவே அனைத்து டிக்கெட்டுகளும் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றது. தற்போது பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் தரிசன டிக்கெட் கூடுதலாக வினியோகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.