ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா!
ரஜினிகாந்த் தன்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை ஆளவேண்டும் என நினைப்பதை ஏற்கமுடியவில்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி திரையுலகில் நல்ல நடிகர் எனத் தனது 16 வயதினிலே படத்தின் மூலம் பெயர் வாங்கிக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதன் பின்னர் அவர்கள் இருவரும் கொடி பறக்குது என்ற படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றினாலும் 40 வருடங்களுக்கும் மேலாக நட்பாகப் பழகி வருகிறார்கள். பாரதிராஜா பல மேடைகளி ரஜினியின் நடிப்புத் திறனைப் பற்றியும் தனிப்பட்ட வாழ்வு பற்றியும் பாராட்டி இருக்கிறார். ஆனாலும் ரஜினியோடு பாரதிராஜா முரண்படும் இடம் ஒன்று இருக்கிறது. ஆம் அதுதான் அரசியல்.
பாரதிராஜா தமிழ் தேசிய அரசியலின் மீது மரியாதை கொண்டு ஒரு தமிழர்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் எனப் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். ஆனால் ரஜினியோ கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக சொல்லி வருகிறார். ரஜினியின் அரசியலை அதிமுக, பாஜக போன்ற கட்சிகளைப் பெரும்பாலானவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றன. அதேபோல பாரதிராஜாவும் தங்கள் நட்பை மீறியும் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று பாரதிராஜா அளித்த ஒரு நேர்காணலில் அவரிடம் ‘நீங்கள் ரஜினியைப் பிறந்தநாளுக்கு எல்லாம் சென்று அவரைப் பாராட்டுகிறீர்கள், ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாரதிராஜா ‘ரஜினி எளிமையான மனிதர். எனது நண்பர்தான். ஆனால் அவர் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆளவேண்டும் என நினைக்கக் கூடாது. மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மண்ணின் மைந்தர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள். அதுபோல எங்கள் மண்ணில் எங்கள் மைந்தன்தான் ஆளவேண்டும் என நினைப்பது தவறா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.