பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பள்ளி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை திறக்க வேண்டும் என அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதி வழங்கினார்கள். அதன் பிறகு ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அந்த விசாரணையில் பள்ளியில் அமைதியான சூழல் நிலவுவதாக கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம் தரப்பில் எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து பள்ளியை முழுமையாக திறக்கலாம். மழலை வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளுடன் பெற்றோர் பள்ளிக்கு வர அனுமதி அளிக்க வேண்டும். பள்ளிக்கூடத்தின் மூன்றாவது தளத்துக்கு வைக்கப்பட்ட சீல் மட்டும் அகற்றப்படக்கூடாது.
நடப்பு கல்வியாண்டு முடியும் வரை பள்ளிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தொடர வேண்டும் என உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.