தமிழ் சினிமா கதைகளை நம்பும் பாலிவுட் இயக்குனர்கள்:அடுத்து பார்சலாகும் அஜித்தின் படம் !

0
123

தமிழ் சினிமா கதைகளை நம்பும் பாலிவுட் இயக்குனர்கள்:அடுத்து பார்சலாகும் அஜித்தின் படம் !

பாலிவுட் இயக்குனர்கள் சமீபகாலமாக தென்னிந்திய படங்களை அதிகமாக ரீமேக் செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியா போன்ற பல மொழிகள் கொண்ட ஒரு தேசத்தில் ஒரு மொழியில் வெற்றி பெறும் திரைப்படம் பிற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்தி சினிமா வழக்கத்தை விட அதிகளவில் தென் இந்திய படங்களை அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களை தங்கள் மொழியில் ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் வீரம் மற்றும் லாரன்ஸின் காஞ்சனா ஆகிய படத்தை அக்‌ஷய் குமார் ரீமேக் செய்து நடித்து வருகிறார். அமீர்கான் விக்ரம் வேதா படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்போது கைதி படத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோல வரிசையாக பாலிவுட் பார்வை கோலிவுட்டை தீண்டியுள்ள நிலையில் இப்போது அஜித்தின் மற்றொரு வெற்றி படமான வேதாளம் படத்தையும் ரீமேக் செய்ய உள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படம் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. 4 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அதற்கான உரிமையை தயாரிப்பாளர் பூஷன் குமார் கைப்பற்றியுள்ளார். அஜித் நடித்த கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்க ரோஹித் தவன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கோலிவுட்டிலேயே கதைப்பஞ்சம் உருவாகி கொரியன் படங்களைக் காப்பி அடிப்பதாக சொல்லும் வேளையில் பாலிவுட் தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருப்பது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.