இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

0
85

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

உரிய காலத்துக்குள் பந்து வீசாமல் இந்திய அணி இழுத்தடிப்பதால் ஐசிசி போட்டி ஊதியத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் (103) மற்றும் கே எல் ராகுல்(88) ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. இதனால் வெற்றி எளிது என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் வள்ளல்களாக மாறிய இந்திய பவுலர்களால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. நியுசிலாந்தின் ராஸ் டெய்லர் சதமடித்து வெற்றியை எளிதாக்கினார்.

இமாலய ஸ்கோர் எடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை என்ற சோகம் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய வீரர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் கிடைத்துள்ளது. உரிய நேரத்தில் இந்திய அணி பந்துவீசி முடிக்காததால் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 50 ஓவர்கள் வீசி முடிக்க வேண்டிய காலத்தில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியதால் இந்த அபராதம் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே டி 20 தொடரின் போது இந்திய அணி இதே போல தாமதமாக பந்து வீசியதற்காக எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அபராதத்தை செலுத்த இந்திய அணி கேப்டன் கோலி ஒத்துக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் தேவை இல்லை என ஐசிசி அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K