அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக

Photo of author

By Vijay

அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக

 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அதிமுக பாஜக இடையே சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.

 

நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் தான், இரு கட்சிகளுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் ஏற்பட காரணமாக அமைந்தது.

 

பாஜகவின் ஆதரவினை எதிர்பாராமல், தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்து களம் காண தயாரானார் எடப்பாடி பழனிச்சாமி.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நாள் கூட பாஜகவினரோடு சேர்ந்து பிரச்சாரம் செய்யாமல் பாஜகவை தவிர்த்தே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

 

நடந்து முடிந்த தேர்தலில் 67,000 வாக்குகள் வித்யாசத்தில், ஆளும் கட்சியான திமுகவிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

 

இந்த தோல்வி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, ஒற்றை தலைமைக்கு எதிராக பல கருத்துக்களை பேசியிருப்பது அணைவரும் அறிந்த ஒன்றுதான்.

 

இந்த நிலையில் தான் பாஜக ஐடிவிங் தலைவர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதிமுகவில் இணைந்த பின் நிர்மல்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். நிர்மல்குமாரின் பேச்சுக்கள் பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், நிர்மல்குமாரை கண்டிக்காமல் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

 

தமிழக பாஜக முக்கிய நிர்வாகியும், அண்ணாமலையின் வலது கரகமாகவும் செயல்படும் அமர்பிரசாத் ரெட்டி, அதிமுகவை பற்றி பல கடுமையான விமர்சனங்களை வைத்தார். இந்த விமர்சனங்கள் அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

அமர்பிரசாத் ரெட்டியின் விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் செல்லூர்ராஜி ஆகியோர் தங்களது பங்கிற்கு விமர்சனங்களை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமர்பிரசாத் ரெட்டி மீது அள்ளி வீசினர்.

 

எது எப்படியோ ஈரோடு இடைத்தேர்தலில் 40,000 மைனாரிட்டி வாக்காளர்களின் வாக்குகள், அதிமுகவிற்கு கிடைக்காமல் போனதற்கு பாஜகவுடனான கூட்டணி தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவித்தது பாஜக நிர்வாகிகள் மத்தியில் மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

 

இருபது ஓவர் கிரிக்கெட் மேட்ச் போல ஒவ்வொரு பாலுக்கும் அதிரடியாக அடித்து விளையாட ஆரம்பித்திருக்கிறது அதிமுக. இரு கட்சிகளும் போகின்ற போக்கை பார்த்தால் வரும் நாடளுமன்ற தேர்தல் வரை கூட்டணி உறவு நீடிக்குமா அல்லது அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று கூறி விடைபெற்று செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையேயும், அரசியல் நோக்கர்களிடமும் நிலவி வருகிறது.